புத்ராஜெயா, ஜூன் 4 - தெலுக் இந்தானில் மத்திய சேம படை வீரர்களை (எஃப்.ஆர்.யு.) பலி கொண்ட சாலை விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
சிறப்பு பணிக்குழுவினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை பெறுவதற்காக அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 13ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்து குறித்து விசாரிப்பதற்காக அந்த சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சின் வான் விபத்து தலைமை இன்ஸ்பெக்டர் பிரிகேடியர் ஜெனரல் டான் சீ கீ தலைமையிலான அந்த குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர்.
சிக்குஸ்-சுங்கை லம்பாம் சாலையில் காலை 8.50 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஈப்போ 5வது பிரிவைச் சேர்ந்த ஒன்பது எஃப்.ஆர்.யு. உறுப்பினர்கள் உயிரிழந்தனர்.
தெலுக் இந்தானில் நடைபெற்ற சித்ரா பௌர்ணமி விழாவில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு விட்டு முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது அந்த எஃப்.ஆர்.யு. டிரக் டிரெய்லர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.


