லண்டன், ஜூன் 4- மலேசியாவுக்கு வருகை தாருங்கள் 2026 (வி.எம்.2026) இயக்கத்தை முன்னிட்டு அடுத்தாண்டு சுமார் ஐந்து லட்சம் இங்கிலாந்து சுற்றுப் பயணிகளை ஈர்க்க மலேசியா திட்டமிட்டுள்ளது.
இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் மலேசியா வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளதன் அடிப்படையில் இவ்வாறு கணிக்கப் பட்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.
இந்த சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு தொடரும் என நான் நம்புகிறேன். லண்டனில் உள்ள டூரிசம் மலேசியா மேற்கொண்டு வரும் முயற்சிகளில் குறிப்பாக ஐந்து லட்சம் இங்கிலாந்து சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் முன்னெடுப்புகளில் நான் திருப்தி அடைகிறேன் என்று அவர் சொன்னார்.
இந்த இலக்கை அடைய முடியும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று 2026 மலேசியாவுக்கு வருகை தாருங்கள் இயக்கத்தை லண்டனில் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
முன்னதாக அவர், இங்கிலாந்து சுற்றுலாத் துறையினர் பங்கேற்ற வட்டமேசை சுற்றுலா கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்த கலந்துரையாடலின் போது, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்வோருக்கு சிறப்பு சலுகை தொகுப்பை வழங்குவது, கோலாலம்பூர் மற்றும் தீபகற்ப மலேசியாவின் இதர இடங்களில் தங்கிச் செல்வதற்கு ஏதுவாக இடை நிறுத்த வாய்ப்புகளை வழங்குவது உள்ளிட்ட சலுகைகள் குறித்து அகமது ஜாஹிட் விளக்கினார்.
இந்த தொகுப்பை வரும் 2026 ஆம் ஆண்டு அமல்படுத்தற்காக சுற்றுலா, கலை மற்றும் கலாசார அமைச்சிடம் இந்த பரிந்துரையை சமர்பித்து அதனை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுச் செல்வேன் என்றார் அவர்.


