கோலாலம்பூர், ஜூன் 4- ஏமாற்று நடவடிக்கைகள் மூலம் அனுகூலங்களைப் பெறுவதற்கான முயற்சிகள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டதன் வாயிலாக கடந்த 2020 முதல் சுமார் 4 கோடியே 90 லட்சம் வெள்ளியை சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனம் காப்பாற்றியுள்ளது.
கடந்த 2020 முதல் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை மோசடி தொடர்பான 679 வழக்குகள் மீது விரிவான விசாரணை மேற்கொள்ளப் பட்டதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் கூறினார்.
அந்த வழக்குகளில் தற்காலிக முடத்தன்மை அனுகூலம், நிரந்தர முடத்தன்மை அனுகூலம், முடத்தன்மை திட்டம் மற்றும் மருத்துவப் பரிசோதனை திட்டம் ஆகியவையும் அடங்கும் என்று அவர் சொன்னார்.
இந்த விசாரணை நடவடிக்கையின் வாயிலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்களில் 383 அல்லது 56.5 விழுக்காட்டு அனுகூலங்களை முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. உறுதியான மற்றும் நேர்மையான நிர்வாக நடைமுறை திறன்மிக்க நிர்வாக முறைக்கு மிகப்பெரிய சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஒரு சான்றாகும் என அவர் குறிப்பிட்டார்.
சமூக பாதுகாப்பு மற்றும் காப்புறுதி அனுகூலங்களைப் பெறுவதில் மோசடி மற்றும் தவறுகளைத் தடுப்பது மீதான கருத்தரங்கைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த கருத்தரங்கை அமெரிக்க சுயேச்சை மருத்துவ உதவி வாரியத்தின் ஒத்துழைப்புடன் சொக்சோ ஏற்பாடு செய்திருந்தது.
அனுகூலங்களைப் பெறுவதில் மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கைகள் தொடர்ந்து சவால்மிக்க ஒன்றாக விளங்கி வருவதாகக் கூறிய ஸ்டீவன் சிம், கடந்த 2024ஆம் ஆண்டு முழுவதும் சட்டப்பூர்வமற்ற அனுகூல கோரிக்கைகள் காரணமாக 21 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டது என்றார்.

