கோலாலம்பூர், ஜூன் 4 - பர்மிங்ஹாமில் நடைபெறும்
2025 பிரிட்டிஷ் பொது ஸ்குவாஷ் போட்டியில் ஜப்பானின் சடோமி வடனாபேவை ஐந்து சுற்று ஆட்டங்களில் வீழ்த்தியதன் வழி தேசிய ஸ்குவாஷ்
நட்சத்திர ஆட்டக்காரரான எஸ். சிவசங்கரி
காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஆட்டத்தில் உலகின் ஏழாவது நிலை வீராங்கனையை 11-9, 11-9, 4-11, 4-11, 11-4 என்ற செட் கணக்கில் 26 வயதான மலேசிய வீராங்கனையான சிவசங்கரி
தோற்கடித்து தனது ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார்.
உலகின் 24-வது இடத்தில் உள்ள சிவசங்கரி முதல் இரண்டு சுற்றுகளை தன்வசப்படுத்தி சிறப்பாக ஆடத் தொடங்கினார். பின்னர் வடனாபே மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றுகளில் கடுமையாகப் போராடி சமன் செய்தார்.
இருப்பினும், கெடாவைச் சேர்ந்த சிவசங்கரி தன்னை திடப்படுத்திக் கொண்டு இறுதிச் சுற்றில் ஆதிக்கம் செலுத்தி கடைசி எட்டு இடங்களில் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்தார்.
இந்த பிரசித்தி பெற்றப் போட்டியில் அரையிறுதிக்கான தனது முயற்சியைத் தொடரும் அவர், அடுத்து நான்காவது நிலை வீராங்கனையான எகிப்தின் அமினா ஓர்ஃபியை எதிர்கொள்வார்.


