ஜெனீவா, ஜூன் 4- பாதுகாப்பற்ற உணவு காரணமாக உலகளாவிய நிலையில் ஒவ்வொரு நாளும் 16 லட்சம் மக்கள் நோய்வாய்ப் படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
அறிவியல் அடிப்படையிலான கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உலகளாவிய முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்தது.
உணவுப் பாதுகாப்பு என்பது உலகளாவிய பொறுப்பு என்று உலக சுகாதார அமைப்பின் ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையின் விஞ்ஞானி சிமோன் மோரேஸ் ரஸ்ல் கூறினார்.
உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த பாதிப்பு தடுக்கக்கூடியது. அதைத் தடுப்பதற்கான அறிவியல் ஏற்கனவே உள்ளது. நமக்குத் தேவையானது ஒருங்கிணைந்த சான்றுகள் சார்ந்த மற்றும் உள்ளடக்கிய நடவடிக்கையாகும் என என்று அவர் கூறினார்.
உணவுப் பாதுகாப்புக்கான பொறுப்பு சமூகத்தின் அனைத்துத் துறைகளுக்கும் உள்ளது என்று ரஸ்ல் வலியுறுத்தினார்.
கொள்கை வகுப்பாளர்கள் அறிவியல் அடிப்படையிலான விதிமுறைகள் மற்றும் வலுவான தரவு அமைப்புகளில் முதலீடு செய்ய வேண்டும். உணவு வணிகங்கள் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து புதுமைகளைப் புகுத்தி கல்வி கற்பிக்க வேண்டும். அதே நேரத்தில் பயனீட்டாளர்கள் விழிப்புடன் இருந்து வீட்டிலேயே பாதுகாப்பாக உணவு கையாளும் முறையைப் பயிற்சி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நாம் ஒவ்வொருவரும் ஒரு இடர் நிர்வாகிகள். ஏனென்றால் பாதுகாப்பாக இல்லாவிட்டால் அது உணவல்ல என்று அவர் கூறினார்.


