இஸ்தான்புல், ஜூன் 3- இஸ்தான்புல் நகரில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையின் போது ரஷ்யா உக்ரேனிடம் ஒரு நகல் அமைதி திட்டத்தை சமர்ப்பித்தது என ரஷ்ய தூதுக்குழுவின் தலைவர் கூறியதாக அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் அந்த பரிந்துரை முழுமையான போர்நிறுத்தத்தை அடைவதற்கான படிகள் மற்றும் நீடித்த அமைதியை அடைவதில் கவனம் செலுத்துதல் ஆகிய இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விளாடிமிர் மெடின்ஸ்கி கூறினார்.
இந்த ஆவணம் விரிவானது மற்றும் அதன் இலக்குகளை அடைவதற்கான பல்வேறு சூழல்களைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். உக்ரேன் தரப்பு ஆவணத்தை மறுஆய்வுக்காக தாங்கள் பெற்றுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
போரில் இறந்த 6,000 உக்ரேனிய வீரர்களின் உடல்களை ரஷ்யா அடுத்த வாரம் ஒரு தரப்பாக திருப்பித் தரும் என்பதையும் அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதையும் மெடின்ஸ்கி உறுதிப்படுத்தினார்.
போர் முனையில் சில பகுதிகளில் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்த பரிந்துரையை மாஸ்கோ வழங்கியதாக அவர் கூறினார்.
இறந்த வீரர்களின் உடல்களை இராணுவம் மீட்க அனுமதிக்கும் நோக்கிலான ஒரு "உறுதியான போர்நிறுத்தம்" என அந்த பரிந்துரையில் விவரிக்கப்பட்டுள்ளது. அந்த நோக்கத்திற்காக மாஸ்கோவும் கியூவும் உள்ளூர் போர்நிறுத்தத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
மீட்பு செயல்முறையை அனுமதிக்க சில மண்டலங்களில் வரையறுக்கப்பட்ட போர்நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டதை உக்ரேன் உறுதிப்படுத்தியதாகவும் சண்டையில் அத்தகைய இடைநிறுத்தத்தை முறைப்படுத்த உக்ரைன் ஒரு பரந்த திட்டத்தை தயாரித்து வருவதாகவும் மெடின்ஸ்கி கூறினார்.
மோதல் தொடங்கியதிலிருந்து மிகப்பெரிய அளவிலான கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொள்ள இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இந்த எண்ணிக்கை 1,000 பேரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


