புத்ரா ஜெயா, ஜூன் 3 - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்
(கே.எல்.ஐ.ஏ.) வழியாக நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு
பாகிஸ்தான், இந்தியா மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 279 பேர் நேற்று
மேற்கொண்ட முயற்சியை மலேசிய எல்லை கட்டுப்பாடு மற்றும்
பாதுகாப்பு நிறுவனம் (ஏ.கே.பி.எஸ்.) வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
கே.எல்.ஐ.ஏ. கண்காணிப்பு அமைப்பு கடந்த 2023ஆம் ஆண்டு
தொடங்கப்பட்டது முதல் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவங்களின் தினசரி
சம்பவங்களில் இதுவே அதிக எண்ணிக்கையைக் கொண்டதாகும் என்று
அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.
அந்நிய நாட்டினர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையும் சம்பவங்களின்
எண்ணிக்கை உச்ச காலக்கட்டத்தில் குறிப்பாக நாட்டின் விடுமுறையின்
போது அதிகம் பதிவாகிறது என்று அது தெரிவித்தது.
நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் முயற்சியில் அந்நிய நாட்டினரை
உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்துவது ஏ.கே.பி.எஸ்.ஸின் முக்கிய
பணியாக உள்ளது. உண்மையில் தகுதி உள்ள மற்றும் நிர்ணயிக்கப்பட்ட
நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைவதை
உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று
அந்நிறுவனம் குறிப்பிட்டது.
சம்பந்தப்பட்ட அந்நிய நாட்டினரிடம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு
சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டப் பின்னர் அவர்கள் அனைவரும்
மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல உத்தரவிடப்பட்டனர்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்ந்து கட்டிக்காக்கப்படுவதை உறுதி செய்வதற்காக தாங்கள் உறுதியுடனும் முழு கடப்பாட்டு உணர்வுடனும் செயல்படுவதை இந்த வெற்றி உறுதிப்படுத்துகிறது என்று ஏ.கே.பி.எஸ். கூறியது.


