பெட்டாலிங் ஜெயா, ஜூன் 3 - சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினரால் முன்னர் வழங்கப்பட்ட வாடகை வீடுகள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்ற தற்காலிக உதவிகளுக்கான காலக்கெடு அண்மையில் காலாவதியாகிவிட்டதைத் தொடர்ந்து அந்த உதவிகள் நீட்டிக்கப்படலாம் என்று பாதிக்கப்பட்டவர்கள் நம்புகிறார்கள்.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது உதவிப் பொருள்களைத் திருப்பித் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
தனது குடும்பத்தினர் தற்போது தங்கள் சொந்த வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய வீட்டில் மூன்று மாதமாக வாடகைக்கு தங்கியுள்ளதாக இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கம்போங் கோல சுங்கை பாருவைச் சேர்ந்த 69 வயதான முகமது நசீர் அப்துல் ஹமீட் கூறினார்.
அதே நேரத்தில் எங்களின் வீடு பழுதுபார்க்கப்படுவதற்காக காத்திருக்கின்றோம்.
எனது வீடு முழுவதுமாக சேதமடைந்து விட்டது. பழுதுபார்க்கும் செலவு 150,000 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை நியமிக்கப்பட்ட குத்தகையாளர் இன்னும் வேலையைத் தொடங்கவில்லை என்று அவர் நேற்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.
இச்சம்பவத்திற்குப் பிறகு தனக்குக் கிடைத்த தற்காலிக வாகனத்தையும் ஒரு மாத தவைண முடிந்ததும் கடந்த மாதம் திருப்பித் தந்துவிட்டதாக முகமது நாசீர் கூறினார்.
எனக்கு ஒரு கார் தேவைப்படுவதால் நான் ஒரு கஞ்சில் காரைப் பயன்படுத்துகிறேன். அதை நான் சிறிது சிறிதாக பழுதுபார்த்து வருகிறேன். நாங்கள் ஆடம்பரத்தைத் தேடவில்லை. எங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு கார் மட்டும் போதுமானது என்று ஒன்பது பிள்ளைகளுக்குத் தந்தையான அவர் கூறினார்.
தனது வீட்டின் பழுதுபார்ப்பு பணிகள் குறித்து கருத்துரைத்த முகமது நாசீர், இப்போதைக்கு தனது குடும்பத்தினர் வழக்கம் போல் வாழ்க்கையைத் தொடர முயற்சிப்பதாகவும் இந்த சம்பவத்தில் பல வீடுகள் பாதிக்கப்பட்டதால் அதனை சீர்செய்ய நேரம் பிடிக்கும் என்பதை புரிந்துகொள்கிறோம் என்றும் கூறினார்.


