கோலாலம்பூர், ஜூன் 3 - இன்றும் நாளையும் கிள்ளான் பள்ளத்தாக்கு கே.டி.எம். கம்யூட்டர் இரயில் பயணிகளுக்கு 50 விழுக்காடு கட்டணக் கழிவு வழங்கப்படும்.
இச்சலுகை அனைத்து வகை டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும் என KTMB நிறுவனம் அறிவித்துள்ளது.
மே 30 தொடங்கி கெப்போங் மற்றும் சாலாக் செலாத்தான் கம்யூட்டர் இரயில் நிலையங்களில் சமிக்ஞை தரமுயர்த்தும் பணிகள் நடைபெறுவதால் இரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடாக இந்தக் கட்டண கழிவுச் சலுகை வழங்கப்படுவதாக KTMB நிறுவனம் விளக்கியது.
எனவே பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதோடு, KTMB Mobile செயலி அல்லது MyRailtime அகப்பக்கம் வாயிலாக பொது மக்கள் பயண நேர அட்டவணை மாற்றங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்


