ஹெமில்டன் (கனடா), ஜூன் 3 - காஸா தீபகற்பத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 40 விழுக்காட்டிற்கும் அதிகமான டயாலிசிஸ் நோயாளிகள் உயிரிழந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) திங்கட்கிழமை கூறியது.
இஸ்ரேல் இராணுவத்தின் சுகாதார வசதிகள் மீதான தாக்குதல்கள், மருத்துவ சேவையைப் பெறுவது மீதான கட்டுப்பாடுகள் மற்றும் தொடர்ச்சியான கட்டாய இடப் பெயர்வு ஆகியவை இப்பகுதியில் மனிதாபிமான நெருக்கடியை மோசமாக்கியுள்ளது என்று அனடோலு ஏஜென்சி தெரிவித்தது.
ராஃபா மற்றும் டெய்ர் அல் பாலாவில் இராணுவப் பாதுகாப்பு கொண்ட விநியோக மையங்களுக்கு அருகில் உதவிப் பொருட்களைப் பெறுவதற்காக காத்திருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர் என்று ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தாக மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் குறிப்பிட்டது.
வட காஸாவிலுள்ள நூரா அல் காபி டயாலிசிஸ் மையம் உட்பட சுகாதார உள்கட்டமைப்பு மீதான இஸ்ரேலிய தொடர்ச்சியான தாக்குதல்கள் சுகாதாரச் சேவைகளைப் பெரிதும் பாதித்துள்ளதாக அவர் கூறினார்.
கடந்த 2023ஆம் ஆண்டு போர் உச்சத்தை எட்டியதிலிருந்து காஸாவில் 40 சதவீதத்திற்கும் அதிகமான டயாலிசிஸ் நோயாளிகள் இறந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
இப்பிராந்தியம் முழுவதும் அதிகரித்து வரும் மக்களின் கட்டாய இடப்பெயர்வு குறித்தும் டுஜாரிக் எச்சரித்தார்.
கடந்த சனிக்கிழமை இஸ்ரேலிய அதிகாரிகள் கான் யூனிஸ் மற்றும் டெய்ர் அல் பலாஹ் ஆகிய இடங்களில் மற்றொரு இடப்பெயர்வுக்கு உத்தரவை பிறப்பித்தனர். 200க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சுமார் 100,000 குடியிருப்பாளர்களை இந்த கட்டாய இடப்பெயர்வு பாதித்துள்ளது எனவும் அவர் சொன்னார்.


