ஷா ஆலம், ஜூன் 3- மூன்று மாநிலங்களிலுள்ள பல மாவட்டங்களில் வெப்ப நிலை தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகபட்சம் 37 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ள நிலையில் அங்கு வானிலை இப்போது முதல் நிலையில் அல்லது எச்சரிக்கை கட்டத்தில் வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கெடா மாநிலத்தின் பண்டார் பாரு மாவட்டம் பேராக் பேராக் மாநிலத்தின் லாரூட், மாத்தாங், கோல கங்சார் மற்றும் மத்திய பேராக் ஆகிய மாவட்டங்களும் கிளந்தான் மாநிலத்தில் மச்சாங் மற்றும் கோல கிராய் ஆகிய மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், சபா மற்றும் சரவாக் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தினசரி வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது.
தொடர்ச்சியான வெப்ப வானிலையால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சுட்டெரிக்கும் வெயிலில் வெளிப்புற நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, நிழலில் அல்லது குளிரூட்டப்பட்ட இடங்களில் தங்குவது ஆகியவை இதில் அடங்கும்.


