அலோர் காஜா, மே 3 - கட்டுப்பாட்டை இழந்த கார் உணவகத்தை மோதி
விபத்துள்ளானதில் அதன் ஓட்டுநரான ஓய்வு பெற்ற போலீஸ்காரர்
காயங்களுக்குள்ளானார். இச்சம்பவம் டுரியான் துங்கால், பந்தாய்
பிலிம்பிங்கில் நேற்று மாலை நிகழ்ந்தது.
நேற்று மாலை 2.55 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் கார்
ஓட்டுநரான முகமது நோர் முகமது ஷா (வயது 80) என்பவருக்கு
தலையில் வீக்கம் ஏற்பட்டதோடு சாலையோரம் இருந்த அந்த கடையின்
முகப்பிடம் இடிந்து விழுந்தது.
அந்த முதியவர் பூலாவ் செபராங்கிலிருந்து தாமான் மலாக்கா பெர்டானா
நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து
விபத்துக்குள்ளானது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
என்ற அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன்
அஷாரி அபு சமா கூறினார்.
இந்த விபத்து நிகழ்ந்த போது அதிர்ஷ்டவசமாக அந்த உணவகத்தில்
வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை எனக் கூறிய அவர், காயமடைந்த
ஓட்டுநர் சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
என்றார்.
இந்த விபத்து தொடர்பில் 1959ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து
விதிமுறைகளின் 10வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.


