(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூன் 2- வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை நாடு எதிர்நோக்கி வரும் தற்போதையச் சூழலில் மக்கள், குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் தங்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்வதற்கான திட்டங்களை அரசாங்கம் அமல்படுத்தி வருகிறது.
உபரி வருமானம் பெற்று வாழ்க்கையில் உயரிய நிலையை அடைவதற்கு உதவக்கூடிய அத்தகையத் திட்டங்களில் ஒன்றாக விளங்குவது செஜாத்ரா கம்யூனிட்டி மடாணி (செஜாத்தி மடாணி) திட்டமாகும்.
இந்த முன்னெடுப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள வெ.50,000 முதல் வெ.100,000 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை ஐ.சி.யு. எனப்படும் பிரதமர் துறையின் அமலாக்க கண்காணிப்புப் பிரிவு மற்றும் மாவட்ட அலுவலகங்கள் கண்காணிக்கும்.
இந்த செஜாத்தி மடாணி திட்டத்தின் கீழ் செராய் பயிரீட்டு திட்டத்தை மேற்கொள்வதற்கு தெராத்தாய் இந்திய சமூகத் தலைவருக்கு (கே.கே.ஐ.) வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்த 50,000 வெள்ளி நிதியுதவியும் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தை மேற்கொள்வதற்கு இந்திய சமூகத் தலைவர் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தொகுதியாக தெராத்தாய் விளங்குவதாக அத்தொகுதியின் இந்திய சமூகத் தலைவர் கி.சரஸ்வதி கூறினார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த செராய் பயிரீட்டுத் திட்டத்தின் கீழ் உணவு செராய் மற்றும் வாசனை செராய் ஆகிய இருவகை பயிர்கள் பயிரிடப்பட்டதாக அவர் சொன்னார்
ஐந்து மாதங்களுக்குப் பின்னர் முதிர்ச்சியடைந்த செராய் பயிர்களை அறுவடை செய்யும் பணி அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் உணவு செராய் ‘பாசார் பாகி‘ எனும் காலைச் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட வேளையில் வாசனை செராய் மூலம் மஜாஜ் எண்ணெய், களிம்பு மற்றும் குளியல் ஜெல் போன்ற பொருட்கள் தயாரிப்பதற்கான வழிமுறைகள் பங்கேற்பாளர்களுக்கு கற்றுத் தரப் பட்டன என்றார் அவர்.
வாசனை செராய் மூலம் மஜாஜ் எண்ணெய் மற்றும் குளியல் ஜெல் ஆகியப் பொருள்களை உற்பத்தி செய்வது தொடர்பான நுட்பங்கள் அத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு பங்கேற்பாளர்களுக்கு கற்றுத் தரப்பட்டன. இந்த தயாரிப்பு பொருள்களை டிக்டாக் மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் (எம்.பி.ஏ.ஜே.) முகப்பிடங்களில் விற்பனை செய்வதற்குரிய வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும் என்று சரஸ்வதி குறிப்பிட்டார்.
இத்திட்ட பங்கேற்பாளர்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதற்கு முன்னர் ஊட்டச் சத்து உள்ளிட்ட தர நிர்ணய சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.
இந்த திட்டம் தொடர்ச்சியான ஒரு முன்னெடுப்பாக விளங்குகிறது. இதில் பங்கு கொண்டவர்கள் தொடர்ந்து செராய் பயிரீட்டில் ஈடுபட்டு அதன் மூலம் பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்குரிய வாய்ப்பினை இந்த திட்டம் வழங்குகிறது. இதன் மூலம் அவர்கள் தங்களின் நேரத்தை பயனான முறையில் செலவிடுவதற்கும் உபரி வருமானத்தை ஈட்டுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
இதனிடையே, அண்மையில் நடைபெற்ற செராய் அறுவடை மற்றும் அந்த விவசாயப் பொருள் மூலம் உற்பத்தி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சித் திட்டத்தை மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு தொடங்கி வைத்தார்.
இந்த செஜாத்தி மடாணி திட்டத்தின் கீழ் செராய் பயரீட்டுத் திட்டத்தை முன்னெடுத்துள்ள தெராத்தாய் இந்திய சமூகத் தலைவர் சரஸ்வதி மற்றும் அவரின் குழுவினருக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
வட்டார மக்களிடையே பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் அதே வேளையில் வேலை வாய்ப்பையும் உருவாக்குவதில் இத்திட்டம் முக்கிய பங்கினை ஆற்றும் என்றும் அவர் சொன்னார்.


