(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூன் 2- கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் இங்குள்ள
தொகுதி சேவை மையத்தில் நேற்று நடைபெற்ற இன்புளுயென்ஸா
தடுப்பூசி இயக்கத்தில் சுமார் 200 பேர் பங்கேற்று பயனடைந்தனர்.
காலை 9.00 மணி தொடங்கி 11.00 மணி வரை இந்த நிகழ்வில்
மூவினங்களையும் சேர்ந்த மக்கள் குடும்பத்தினருடன் வந்து தடுப்பூசியைப்
பெற்றனர். நோய்த் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பொது மக்கள் மத்தியில்
அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.
இந்த தடுப்பூசித் திட்டத்திற்கு தொகுதி மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவு
மிகவும் வரவேற்கத் தக்க வகையில் இருந்ததாக தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் எஸ். பிரகாஷ் கூறினார்.
சமூக சுகாதார பாதுகாப்பு தனது தொகுதியின் பிரதான இலக்காக
உள்ளதாகக் கூறிய அவர், அனைத்து மக்களின் உடலாரோக்கியத்தை
கருத்தில் கொண்டு சுகாதாரப் பராமரிப்புத் திட்டங்களை அதிகளவில்
முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை தாம் சட்டமன்றத்தில்
தொடர்ந்து வலியுறுத்தி வரப்போவதாக சொன்னார்.
மனிதர்களின் சுபிட்சமான வாழ்வுக்கு சுகாதாரம் அடித்தளமாக
விளங்குகிறது. ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நாம் வேலை,
கல்வியில் முழு கவனம் செலுத்தி குடும்பத்திற்கு சமூகத்திற்கு
ஆக்ககரமான பங்களிப்பை வழங்க இயலும்.
இது போன்ற தடுப்பூசித் திட்டங்கள் சிறிய அளவிலான முன்னெடுப்பாக
விளங்கினாலும் மக்களின் உடல் நலத்தைப் பாதுகாப்பதில் இது முக்கியப்
பங்கினை ஆற்றும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த தடுப்பூசி இயக்கத்தின் போது இன்புளுயென்ஸா நோய்க்கான
அறிகுறிகள், அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றோடு
பொதுவான சுகாதார பாதுகாப்பு குறித்தும் விளமக்கமளிக்கப்பட்டதாக அவ
குறிப்பிட்டார்.
உடலாரோக்கியத்தை பாதுகாப்பதில் மக்கள் முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரகாஷ் கேட்டுக் கொண்டார்.
நோய் வந்தால் மட்டுமே சிகிச்சையை நாடும் போக்கினை நாம்
கொண்டிருக்கக் கூடாது. சிகிச்சையைக் காட்டிலும் நோய்த் தடுப்பு மிக
முக்கியமானது. தடுப்பூசி எளிதானது. அதே சமயம், நம்மையும் நமது
நேசத்திற்குரியவர்களையும் பாதுகாக்க க் கூடியது என்றார் அவர்.


