கிள்ளான், ஜூன் 2- சிலாங்கூர் அரச படகு கிளப்பில் (ஆர்.சி.ஓய்.சி.) இருந்து 20 கிலோ மீட்டர் வரையிலான கிள்ளான் ஆற்றின் பகுதியில் 1.234 டன் குப்பைகளை தன்னார்வலர்கள் சேகரித்தனர்.
பல்வேறு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், மீனவர் குழுக்கள் மற்றும் உயர்கல்வி மாணவர்களைச் உள்ளடக்கிய 500 பங்கேற்பாளர்கள் மூலம் இந்த கூட்டு துப்புரவு இயக்கம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக கிள்ளான் டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமீட் ஹூசைன் தெரிவித்தார்.
கிள்ளானில் குறிப்பாக கிள்ளான் ஆற்றின் நெடுகிலும் தூய்மையை மேம்படுத்த வேண்டும் என்ற மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் உத்தரவின் பேரில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
சுங்கை கிள்ளான் துப்புரவு இயக்கத்தில் ஆர்.சி.ஓய்.சி. பகுதியைத் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்க மற்றும் சரியான நடவடிக்கையாகும். ஏனெனில் இது மலாக்கா நீரிணையில் ஆற்று நீர் கலப்பதற்கு முன் உள்ள இறுதிப் புள்ளியாகும் என அவர் குறிப்பிட்டார்.
ஆற்றின் நீரோட்டத்தில் சேரும் எந்தவொரு மாசுபாடும் குப்பையும் இறுதியாக இங்குதான் வந்து சேரும். ஆகவேதான் இது துப்புரவு மற்றும் மறுசீரமைப்புக்கான முக்கியமான இடங்களில் ஒன்றாக அமைகிறது என்று சொன்னார்.
நேற்று இங்குள்ள ஆர்.சி.ஓய்.சி. பகுதியில் நடைபெற்ற கிள்ளான் ஆற்றை தூய்மைப்படுத்தும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
மூன்று மணி நேர துப்புரவு இயக்க நிகழ்வில் 30 படகுகள் பங்கேற்றதாகத் தெரிவித்த அவர், பெரிய அல்லது சிறிய அளவில் பல்வேறு தரப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி தொடரும் என்றார்.


