ஷா ஆலம், ஜூன் 2 - சிலாங்கூர் மக்கள் கல்வித் திட்டத்திற்கு (பி.டி.ஆர்.எஸ்.) மாநில அரசு 1 கோடியே 10 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டத்தின் வழி 160,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் டியூஷன் எனப்படும் பிரத்தியேக வகுப்புகளில் பங்கேற்பதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
கல்வியில் சற்று பின்தங்கியுள்ள 4ஆம் மற்றும் 5ஆம் படிவ மாணவர்களுக்கு உதவுவதை இம்மாதம் தொடங்கும் இந்த இலவச கல்வித் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் அறக்கட்டளையின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.
இந்தத் திட்டம் தொடக்கப்பள்ளியில் மாற்றுப் பாடங்களில் பயில்பவர்களுக்கும் பயனளிக்கும் என்று அவர் சமீபத்தில் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
கடந்த ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களின் சிறப்பான அடைவு நிலைக்கு இந்த பி.டி.ஆர்.எஸ். திட்டம் முக்கிய பங்காற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி கூறியிருந்தார்.
நான்காம் மற்றும் 5ஆம் படிவ மாணவர்களுக்கான இந்த பி.டி.ஆர்.எஸ். திட்டத்தில் பஹாசா மலேசியா, ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு மற்றும் கூடுதல் கணிதம் ஆகிய பாடங்களுக்கு பிரத்தியேக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
மேலும், கல்வியில் பலவீனமான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை இந்த திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
.


