பாலிக் பூலாவ், ஜூன் 2- தெலுக் பஹாங் வன பூங்காவில் மலையேறும் போது உடலில் நீரிழப்பு மற்றும் சோர்வுக்கு ஆளான இரண்டு மலையேறிகள் நேற்று இரவு தீயணைப்புப் படையினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட 40 வயது ஆடவரும் 34 வயது பெண்ணும் மாலை 6.40 மணிக்கு தீயணைப்புத் துறையைத் தொடர்பு கொண்டு தாங்கள் பலவீனமான நிலையில் இருப்பதாகக் கூறினர்.
இந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து தெலுக் பஹாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள் ஸ்டேஷன் 10, தெலுக் பஹாங் வனப் பூங்காவில் உளள தங்கள் இருப்பிடத்தை வாட்ஸ்அப் செயலி மூலம் பகிர்ந்து கொண்டனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புப் படையினர் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட அவவிருவரையும் கண்டுபிடித்து இரவு 10.51 மணிக்குப் பாதுகாப்பாக கீழே இறக்கினர் என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பின்னர் பாதிக்கப்பட்ட இருவரும் தொடர் சிகிச்சைக்காக மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மீட்புப் பணியில் ஐந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.


