நிபோங் திபால், ஜூன் 2- இங்குள்ள புக்கிட் தம்புன் டோல் சாவடியில் கைகலப்பில் ஈடுபட்ட ஆடவர்களில் ஒருவரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். வாகனத்தின் பின்னால் மோதியதன் விளைவாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு இந்த கைகலப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட அந்த உள்நாட்டு ஆடவரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் தாங்கள் தற்போது ஈடுபட்டு வருவதாக செபராங் பிறை செலாத்தான் மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜெய் ஜனுவரி சியோவோ கூறினார்.
காயத்தை ஏற்படுத்தியற்காக குற்றவியல் சட்டத்தின் 323வது பிரிவு மற்றும் குற்றவியல் நோக்கத்துடன் அச்சுறுத்தியது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 506வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்ற அவர் பெர்னாமா தொடர்பு கொண்ட போது தெரிவித்தார்.
அந்த டோல் சாவடியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் கைகலப்பு தொடர்பில் இரு புகார்களை போலீசார் பெற்றுள்ளதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன. இந்த கைகலப்பைச் சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
வெறும் கைலியுடன் தொப்பி அணிந்திருந்த ஆடவர் ஒருவர் மற்றொரு ஆடவரை ஆயுதத்துடன் தாக்க முயல்வதையும் பொது மக்கள் அவர்களைச் சமாதானப்படுத்துவதையும் சித்தரிக்கும் காட்சிகள் அந்த 28 விநாடி காணொளியில் பதிவாகியிருந்தன.


