காஸா நகர்/அங்காரா, ஜூன் 2- மருத்துவப் பொருள்களை ஏற்றிய சுமார் 3,000 டிரக்குகள் காஸாவுக்குள் நுழைவதை இஸ்ரேலிய இராணுவம் தடுத்துள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை காஸாவில் மோசமான கட்டத்தை எட்டியுள்ள மனிதாபிமான நிலையை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.
காஸாவிலுள்ள மருத்துவமனைகள் தற்போது கடுமையான மருந்து மற்றும் மருத்துவ பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள நிலையில் அங்கு கலவரமான சூழல் உருவாகியுள்ளது என்று காஸா சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் முனிர் அல்-புர்ஷ் கூறினார்.
எகிப்து நாட்டின் அரிஷ் நகரிலிருந்து மருத்துவ உபகரணங்களை ஏற்றி வந்த 3,000 டிரக்குகளை இஸ்ரேலிய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.
மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் காஸாவுக்குள் நுழைவதை தடுக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளின் நடவடிக்கையால் அங்கு தொற்று நோய் பரவுவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
காஸாவில் வயிற்றுப் போக்கு, மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் திடீரென அதிகரித்து வருவதோடு நீர் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 90 விழுக்காட்டு மக்களுக்கு தற்போது சுத்தமான நீர் கிடைக்கவில்லை என்றார் அவர்.
உதவிப் பொருள் விநியோகம் தொடர்பில் இஸ்ரேல் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வழிகாட்டியை அவர் கடுமையாக விமர்சித்தார். இதனை இன அழிப்பு மற்றும் கட்டாய இடப் பெயர்வுக்கான கருவி எனவும் அவர் வர்ணித்தார்.
கடந்த மே 27ஆம் தேதி தொடங்கி மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்கு காத்திருக்கும் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 48 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று காஸா ஊடக அலுவலகம் கூறியது.


