குவா மூசாங், ஜூன் 2- இங்குள்ள குவா மூசாங்-கோல லிப்பிஸ் சாலையின் 8வது கிலோமீட்டரில் விரைவுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 19 பயணிகள் பதற்றம் நிறைந்த தருணத்தை எதிர்கொண்டனர்.
குவா மூசாங்கில் நேற்று பிற்பகல் 1.40 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு அதிவேகமாக பேருந்தைச் செலுத்திய ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என நம்பப்படுகிறது என்று குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் சிக் சூன் ஃபூ கூறினார்.
இவ்விபத்து நிகழ்ந்த போது சம்பந்தப்பட்ட பேருந்து ரந்தாவ் பஞ்சாங்கில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
57 வயதான ஓட்டுநர் செலுத்திய அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை மோதியது தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
இவ்விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் அனைத்து பயணிகளும் மாற்றுப் பேருந்தில் பயணத்தைத் தொடர்ந்தனர் என்றும் அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் 1959ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து விதிமுறைகளின் 10வது விதியின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட பேருந்தின் டேஷ்போர்டு கேமரா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சிக் கூறினார்.


