(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூன் 1- தமிழர்களின் பாரம்பரிய பெருமைகளை பறைசாற்றுவதை பிரதான நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் வண்ண விழா அடுத்தாண்டு தொடங்கி மாநில அளவில் நடத்தப்படும் என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.
பல்வேறு சமூக அமைப்புகளின் ஆதரவுடன் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் எம்.பி.பி .13வது பிரிவு ஏற்பாடு செய்த இந்த தமிழ் வண்ண விழாவுக்கு கிடைத்த அமோக ஆதரவைத் தொடர்ந்து இந்த விழாவை மாநில அளவில் கொண்டாடுவதற்கான முயற்சிகளை தாம் முன்னெடுத்துள்ளதாக அவர் சொன்னார்.
இவ்விவகாரம் தொடர்பில் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் சமூக மேம்பாட்டுத் துறைக்கான இயக்குநர் ஷாரின் அகமதுவுடன் நான் விவாதித்துள்ளேன். அடுத்தாண்டு இந்த நிகழ்வை பெரிய மண்டபத்தில் மேலும் விரிவான அளவில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
தமிழர்களின் உயரிய பாரம்பரியத்தின் பெருமைகளை இளம் தலைமுறையினர் அறிந்து போற்றுவதில் இத்தகைய நிகழ்வுகள் பெரிதும் துணை புரியும் என பாப்பாராய்டு சொன்னார்.
நமது வாழ்வியலுடன் வேரூன்றிய பண்பாட்டுக் கூறுகளை நாம் காலப் போக்கில் மறந்து வருகிறோம். மற்ற இனத்தினர் குறிப்பாக சீனர்கள் தங்கள் நிகழ்வுகளை மிகவும் கண்ணியத்துடன் நடத்தும் வேளையில் நாம் இறப்பு, திருமணம் போன்ற நிகழ்வுகளில் அநாகரீகச் செயல்களைப் புரிந்து இனத்தின் மதிப்பைக் குறைத்துக் கொள்கிறோம்.
இத்தகையப் போக்கு மாற வேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு பெற்றோர்களின் கைகளில் உள்ளது. நமது கலாசாரத்தின் பெருமையை பிள்ளைகளுக்கு போதிப்பதன் மூலம் உயரிய பண்பாடு கொண்ட இனமாக நாம் மாற முடியும் என அவர் தெரிவித்தார்.
மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெறும் நோக்கிலான 1,000 மாணவர்கள் பங்கேற்கும் பாரதியாரின் அச்சமில்லை பாடலை பாடும் அங்கம் உள்பட பல்வேறு சிறப்பான நிகழ்வுகளுடன் இந்த தமிழ் வண்ண விழாவை ஏற்பாடு செய்த ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் நட்டின்ரன் ராஜ் பாஸ்கரன் மற்றும் ஏற்பாட்டுக குழுவினருக்கு தாம் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாக பாப்பராய்டு சொன்னார்.


