கோலாலம்பூர், ஜூன் 1- அமைச்சரவையை அவசரமாக மாற்றியமைக்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அண்மையில் இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்த போதிலும் அரசாங்கத்தின் செயல்பாடுகள் வழக்கம் போல் இருப்பதாக அன்வார் கூறினார்.
அமைச்சரவையை தற்போது அவசரமாக மறுசீரமைப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை. இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அடுத்து என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்க நாங்கள் அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கிறோம்.
அவர்கள் தற்போது விடுப்பில் உள்ளனர். அவர்களின் விடுப்பு விண்ணப்பத்தை நான் அங்கீகரித்துவிட்டேன். நாம் அனுமானங்களைச் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன் என்று அவர் இன்று கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சி 2025 நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.
அமைச்சரவை வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்றும் நிர்வாகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்ய தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அன்வார் தெளிவுபடுத்தினார்.
தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் சமர்ப்பித்து, விடுப்பைத் தொடங்கி'ய பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிஸி ராம்லி மற்றும் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது ஆகியோர் மே 28ஆம் தேதி
அறிவித்தனர்.
ரபிஸி மற்றும் நிக் நஸ்மியின் ராஜினாமா முறையே ஜூன் 17 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் அமலுக்கு வரும்.
நிக் நஸ்மி மற்றும் ரபிஸியின் அமைச்சுகளை தற்காலிகமாக கவனிக்குமாறு மற்ற அமைச்சர்களை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் கேட்பேன் என்று அன்வார் கூறினார்.
அதே நேரத்தில், தத்தம் கடமைகளைத் தொடர்ந்து செய்யுமாறு இரண்டு அமைச்சுகளின் தலைமைச் செயலாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற கெஅடிலான் கட்சித் தேர்தலில் ரபிஸியும் நிக் நஸ்மியும் தோல்வியடைந்தனர். கெஅடிலான் துணைத் தலைவர் பதவியை ரபிஸி தக்க வைத்துக் கொள்ளத் தவறிவிட்டார். அவர் நூருள் இஸ்ஸா அன்வாரிடம் தோல்வியடைந்தார். அதே நேரத்தில் உதவித் தலைவர் பதவிக்கான போட்டியில் நிக் நஸ்மி தோற்கடிக்கப்பட்டார்.


