ஷா ஆலம், ஜூன் 1- கோவிட்-19 நோய்த் தொற்றின் NB.1.8.1 எனப்படும் புதிய திரிபுவின் பரவலை உலக சுகாதார அமைப்பு தற்போது அணுக்கமாக கண்காணித்து வருகிறது
இந்த வகை திரிபு ஐரோப்பா, தென்கிழக்காசியா மற்றும் வட மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட பல கண்டங்களில் விரைவாகப் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் JN.1 வழித் தோன்றலான இந்த புதிய வகை திரிபு குறைந்தது 22 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கடந்த மே 28ஆம் தேதி வெளியிடப்பட்ட சமீபத்திய புதுப்பிப்பில் தெரிவித்தது.
இந்த திரிபு கண்காணிக்கப்படும் ஒரு திரிபாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், தற்போது பரவி வரும் பிற கோவிட்-19 வகைகளை விட NB.1.8.1 மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துவதற்கான ஆதாரங்கள் தென்படவில்லை என்று அவ்வமைப்பு குறிப்பிட்டது.
இந்த புதிய திரிபுவில் எந்த சிறப்பு அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை என்றும் இதன் அறிகுறிகளின் வடிவம் முந்தைய தொற்றுநோய்களைப் போலவே இருப்பதாகவும் வான்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தைச் சேர்ந்த தொற்று நோய் நிபுணர் பேராசிரியர் வில்லியம் ஷாஃப்னர் கூறினார்.
இந்நோய்க்கான பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை புண், சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும்.
தடுப்பூசி மற்றும் முந்தைய தொற்றுகளிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் இந்த திரிபுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கக்கூடும் என்றும் நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த நேரத்தில் இது ஒரு பெரிய அச்சுறுத்தலாகக் கருதப்படவில்லை என்றாலும், தொற்று பரவுவதைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு உலக சுகாதார அமைப்பு பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.


