கோலாலம்பூர், ஜூன் 1- கடந்த வியாழக்கிழமை முதல் இங்குள்ள தேசிய இருதய சிகிச்சைக் கழகத்தில் (ஐ.ஜே.என்.) சிகிச்சைப் பெற்று வந்த புருணை சுல்தான் சுல்தான் ஹசனால் போல்கியா வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.
மாட்சிமை தங்கிய சுல்தான் தற்போது கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாக புருணை பிரதமர் அலுவலகம் (ஜேபிஎம்) இண்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு பதிவின் மூலம் அறிவித்தது.
புருணை டாருஸ்ஸலாம் திரும்புவதற்கு முன்பு இன்னும் சில நாட்கள் ஓய்வெடுக்குமாறு மாட்சிமை தங்கிய சுல்தானுக்கு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 46வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் தொடர்புடைய மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக சுல்தான் ஹசனால் போல்கியா மே 25ஆம் தேதி மலேசியா வந்தார்.
சோர்வு காரணமாக மே 27 முதல் சுல்தான் ஐ.ஜே.என். இல் ஓய்வெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.


