கூச்சிங், ஜூன் 1- பிந்துலுவில் நிகழ்ந்த இரு தீவிபத்துகளில் ஆடவர் ஒருவர் உயிரிழந்ததோடு ஐந்து வரிசை வீடுகளும் முற்றாக அழிந்தன.
இன்று அதிகாலை நிகழ்ந்த முதலாவது சம்பவத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்த வேளையில் நேற்றிரவு நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில் 21 பேர் தங்கள் இருப்பிடத்தை இழந்ததாக சரவா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு கூறியது.
ஜாலான் சிபியூவில் விடியற்காலை 2.32 மணியளவில் நிகழ்ந்த தீவிபத்தில் 50 வயது மதிக்கத்தக்க வோங் ஜூன் டின் என்ற ஆடவர் மரணமடைந்ததாக அத்துறை புலனம் வழி வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
தீ ஏற்பட்ட வீட்டில் சிக்கிக் கொண்ட அந்த ஆடவரை பொது மக்கள் வெற்றிகரமாக மீட்டனர். சுயநினைவற்ற நிலையில் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த ஆடவர் உயிரிழந்து விட்டதை சம்பவ இடத்திலிருந்து சுகாதார அமைச்சின் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்
முன்னதாக, நேற்றிரவு பிந்துலு, ஜாலான் அபாங் உசோப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் ஐந்து வரிசை வீடுகள் சேதமடைந்தன.
இந்த தீவிபத்து தொடர்பில் நேற்றிரவு 11.45 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புக் குழுவினர் அதிகாலை 6.25 மணியளவில் தீயை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
தீவிபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு ஆராயப்பட்டு வருகிறது.


