கோலாலம்பூர், ஜூன் 1- அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த இந்திய போதைப்பொருள் கடத்தல் மன்னன் கடந்த மே 13 ஆம் தேதி அதிகாலை தலைநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்த போது காவல்துறையினரிடம் பிடிபட்டார்.
முப்பது வயதுடைய அந்த சந்தேக நபர், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழுவும் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையும் ஒரு ஹோட்டல் அறையில் அதிகாலை 1.35 மணியளவில் நடத்திய சோதனையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
அதிகாரிகளிடமிருந்து தப்பும் நோக்கில் சம்பந்தப்பட்ட நபர் சுற்றுலாப் பயணிகளுக்கான வருகை பாஸைப் பயன்படுத்தி இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாட்டிற்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின் ஹூசைன் தெரிவித்தார்.
சந்தேக நபர் நாட்டில் எந்தவொரு போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பது விசாரணையின் போது கண்டறியப்பட்டது.
இருப்பினும், அவருக்கு உள்ளூர் அமைப்புகள் அல்லது ரகசிய குண்டர் கும்பல்களில் தொடர்பு உள்ளதா என்பதை அடையாளம் காண மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து, இந்திய அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த அந்த சந்தேக நபர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.54 மணிக்கு விமானத்தின் மூலம் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப் பட்டதாக அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட நபர் அனைத்துலகப் போதைப்பொருள் கும்பலின் தலைவர் என்று முன்னதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
அமெரிக்காவிலிருந்து சரக்கு விநியோகம் வழியாக கோகோயின் மற்றும் கஞ்சா உட்பட 1,128 கோடி ரூபாய் (63.5 கோடி வெள்ளி) மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்தியதில் தொடர்புடைய நபர் இவர் என்று அந்த ஊடகம் தெரிவித்தது.
சந்தேக நபர் இந்தியா வந்தவுடன் நாட்டின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் மையத்தால் மேல் நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார்.


