ஜனிவா, மே 30 - அடுத்த ஐந்தாண்டுகளில் பூமியை இன்னும் கடுமையான வெப்பநிலை தாக்கும் என்று உலகின் தலைசிறந்த வானிலை நிறுவனங்கள் கணித்துள்ளன.
மேலும், வருடாந்திர வெப்பநிலை புதிய உச்சம் தொடுவதற்கு 80 விழுக்காடு வாய்ப்புள்ளதாக உலக வானிலை அமைப்பும் இங்கிலாந்து வானிலை அலுவலகமும் எச்சரித்துள்ளன.
அதனால், நடப்பு பத்தாண்டு காலம் முடிவதற்குள், உலக வெப்பநிலை மிகவும் ஆபத்தான இரண்டு டிகிரி செல்சியசை எட்டும் வாய்ப்பு உள்ளது என்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வலுவான சூறாவளிகள், வறட்சி ஆகியவை ஏற்படும். இதன் காரணமாக உயிரிழப்பு சம்பவங்கள் நிகழலாம் என அஞ்சப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனிப்பிரதேசம் 3.5 மடங்கு வேகமாக வெப்பமடைந்து உருகும்போது கடல் நீர்மட்டம் உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
--பெர்னாமா


