ஷா ஆலம், மே 30 - உலு லங்காட், சுங்கை லங்காட்டுக்கு அருகிலுள்ள கம்போங் சுங்கை லோங்கில் உள்ள அரசாங்க ரிசர்வ் நிலத்தில் செயல்பட்டு வரும் ஒரு கால்நடை வளர்ப்பு பண்ணைக்கு எதிராக இரு விசாரணை அறிக்கைகளை சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) திறந்துள்ளது.
அந்த இடத்தில் கால்நடை வளர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது லுவாஸின் தொடக்கக் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது
எனினும், இந்த பண்ணையிலிருந்து ஆற்றில் கழிவுகள் கலந்ததற்கான எந்த தடயமும் இல்லை என்று சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
இந்த கால்நடை வளர்ப்பு நடவடிக்கையால் நதி நீருக்கு மாசுபாடு ஏற்பட்டதாக குடியிருப்பாளர்களிடமிருந்து புகார் வந்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது என ஹென அஸர் குறிப்பிட்டார்.
எழுத்துப்பூர்வ அனுமதியின்றி நீர் ஆதாரத்திலிருந்து தண்ணீரை மாற்றியதற்காக 1999 ஆம் ஆண்டு லுவாஸ் சட்டத்தின் 43(1) வது பிரிவின் கீழும் அனுமதியின்றி நீர் ஆதாரத்திலிருந்து நீரைப் பயன்படுத்தியதற்காக 107(பி) பிரிவின் கீழும் சம்பந்தப்பட்ட வளாகம் விசாரிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
மழையால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி நீர் மாதிரி எடுக்கப்பட்டு, ஆய்வுக்காக இரசாயனத் துறைக்கு அனுப்பப்பட்டதாக ஜமாலியா மேலும் கூறினார்.
விசாரணை அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் அபராத நடவடிக்கைக்காக அது துணை அரசு வழக்கறிஞரின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்படும் என்றார் அவர்.


