கோலாலாம்பூர், மே 30 - தனது பெயரைப் பயன்படுத்தி ஊடக அறிக்கைகளில் தவறான தகவல்களைப் பரப்பும் பொறுப்பற்ற தரப்பினரை, பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கண்டித்துள்ளார்.
எந்தவோர் அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையாக இருந்தாலும், அது தனது அலுவலகம் அல்லது அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்கள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும் என தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சராகவும் இருக்கும் ரமணன் கூறினார்.
எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
தற்போது அவதூறு விஷயங்களைப் பரப்பும் செயல் பரவலாகி வருகிறது. ஆகவே, கட்சி உறுப்பினர்கள் கடுமையான நடவடிக்கைகளால் அதை எதிர்கொள்ள வேண்டும் என கடந்த வாரம் பி.கே.ஆர் தேசியப் பொதுப் பேரவையில் தனது நிறைவு உரையின் போது தான் குறிப்பிட்டதையும் ரமணன் சுட்டிக் காட்டினார்.


