ஷா ஆலம், மே 30 - பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் இம்மாதம்
மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் அந்நிய நாட்டினரால் உரிய
அனுமதி இன்றி நடத்தப்பட்ட மூன்று கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
மலேசிய குடிநுழைவுத் துறையின் ஒத்துழைப்புடன் பல்வேறு பகுதிகளில்
நடத்தப்பட்ட இச்சோதனைகளில் 637 அந்நிய நாட்டினரும் கைது
செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் முகமது ஜாஹ்ரி
சாமிங்கோன் கூறினார்.
இந்த கூட்டு நடவடிக்கையின் போது கம்போங் செம்பாக்கா, ஜாலான்
பிஜேயு 1, புளோரா டாமன்சாரா, பிஜேயு 8, மெந்தாரி கோர்ட்
அப்பார்ட்மெண்ட் மற்றும் பிஜேஎஸ் 8 ஆகிய இடங்கள்
சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
மேலும், 34 வர்த்தக வளாக சரிபார்ப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டதோடு ஐந்து குற்றப்பதிவுகளும் ஒரு குற்ற
அறிக்கையும் வெளியிடப்பட்டன என்று மாநகர் மன்றக் கூட்டத்தை
முன்னிட்டு வெளியிட்ட செய்திக் குறிப்பில் அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின்
உதவியுடன் ஜாலான் ஓத்மான் பெரிய மார்க்கெட்டில் விலைக் குறியீடு
மற்றும் நிறுவை தொடர்பான சோதனை மேற்கொள்ளப்பட்டன என்றார்
அவர்.
இந்த சோதனையில் 153 அங்காடி வியாபாரிகள் மற்றும் கடை
உரிமையாளர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்நடவடிக்கையில்
1972ஆம் ஆண்டு எடை நிறுவைச் சட்டத்தின் கீழ் ஒரு வர்த்தக
வளாகத்திற்கு குற்றப்பதிவு வெளியிடப்பட்டது என்று அவர் சொன்னார்.
தங்கள் வர்த்தக நடவடிக்கைகள் எப்போதும் விதிமுறைகளுக்கு
உட்பட்டதாகவும் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டியை பின்பற்றும் விதத்திலும் இருப்பதை உறுதி செய்யும்படி வணிகர்களை அவர் கேட்டுக் கொண்டார்.


