கோத்தா பாரு, மே 30 - கிளந்தான் மாநில மக்கள் மத்தியில் நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரோல் எனப்படும் அதிக கொழுப்பு அளவு தேசிய சராசரி குறியீட்டை விட அபரிமிதமாக உயர்வு கண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அகமது தெரிவித்தார்.
தேசிய சுகாதாரம் மற்றும் நோயியல் தன்மை 2023 கணக்கெடுப்பின் (என்.எச்.எம்.எஸ்.) அடிப்படையில் கிளந்தானில் 16.3 சதவீத மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தேசிய சராசரி குறியீடான 15.6 விழுக்காட்டுடன் ஒப்பிடும்போது 0.7 சதவீதம் அதிகமாகும் என்று அவர் கூறினார்.
கிளந்தான் மக்களிடையே கொலஸ்ட்ரோல் அளவு அதிகரித்துள்ளது. தற்போது இது 34.9 சதவீதமாக உள்ளது. 33.3 விழுக்காடாக உள்ள தேசிய சராசரி அளவைக் காட்டிலும் இது அதிகமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று பெங்கலான் செப்பாவில் கிளந்தான் ஆரோக்கிய மைய தினத்தை தொடக்கி வைத்த போது அவர் இதனைக் கூறினார். இந்நிகழ்வில் மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஜைனி ஹுசேனும் கலந்து கொண்டார்.
கிளந்தானில் 51.6 விழுக்காட்டு மக்கள் (தேசிய சராசரி 54.4 சதவீதம்) அதிக எடை அல்லது பருமனானவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 27.9 சதவீதம் பேர் (தேசிய சராசரி 9.2 சதவீதம்) உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டுள்ளனர் என்று டாக்டர் ஜூல்கிப்ளி குறிப்பிட்டார்.
தேசிய நிலையுடன் ஒப்பிடும்போது பல குறியீடுகளில் மாநிலம் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்திருந்தாலும் என்.எச்.எம்.எஸ். 2023 இல் கிளந்தான் பற்றிய கண்டுபிடிப்புகள் கவலையளிப்பதாக உள்ளன அவர் விவரித்தார்.
இதை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை கலாச்சாரத்தை அமல்படுத்துவதற்காக அமைச்சு 'தேசிய மலேசியா சிஹாட் நிகழ்ச்சி நிரலை' அறிமுகப்படுத்தி செயல்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்


