கோம்பாக், மே 30 - உள்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளை
மேற்கொள்வதற்காக மாநிலத்திலுள்ள அனைத்து பூர்வக்குடி
கிராமங்களுக்கும் தலா 50,000 வெள்ளி மானியத்தை மாநில அரசு
வழங்குகிறது.
நியமிக்கப்பட்ட கிராமத் தலைவர் அல்லத தோக் பாத்தின் பிரதிநிதிக்கும்
கிராம பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு குழுவின் வாயிலாக இந்த
மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்ற பூர்வக்குடி விவகாரங்களுக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.
தற்போது சோலார் விளக்குகளை சார்ந்திருக்கும் சில கிராமங்களில்
மின்சார வசதியை ஏற்படுத்தித் தருவதில் மாநில அரசு உதவி வருகிறது
என்று அவர் சொன்னார்.
பூர்வக்குடியினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் கடப்பாட்டை மாநில
அரசு கொண்டுள்ளது. இது தவிர, பூர்வக்குடி கிராமங்களில் குறிப்பாக
உட்புறப்பகுதிகளில் சாலைகள், மின் விளக்குகள் போன்ற வசதிகளை
ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளையும் அது எடுத்து வருகிறது
என அவர் குறிப்பிட்டார்
நேற்று கோம்பாக் பூர்வக்குடி மருத்துவமனைக்கு வருகை புரிந்தப் பின்னர்
அவர் இதனைத் தெரிவித்தார்.
அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 33 நோயாளிகளுக்கு
பாப்பராய்டு ரொக்க உதவியை வழங்கினார்.
பூர்வக்குடியினருக்கு மாநில அரசு வழங்கி வரும் உதவிகளில் சமூக
நிகழ்வுகளை நடத்துவதற்காக அச்சமூகத்திற்கு 10,000 வெள்ளி மானியம்
வழஙகுவதும் அடங்கும் என அவர் சொன்னார்.
மாநிலம் முழுவதும் 62 தோக் பாத்தின்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் 74
பூர்வக்குடி கிராமங்களுக்கு இந்த வருடாந்திர மானியம் வழங்கப்படுகிறது
என்றார் அவர்.


