சிரம்பான், மே 30 - சிரம்பானில் அமைந்துள்ள துவாங்கு ஜாஃபார் மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரியும் காட்டுக் குரங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறை அறிவுறுத்தியுள்ளது.
குரங்குகளுக்கு உணவளிக்கும் செயலானது அவற்றின் இயற்கை குணத்தை மாற்றி, தைரியமாகவும் மனிதர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாகவும் நடந்துகொள்ள தூண்டுவதாக அத்துறையின் நெகிரி செம்பிலான் மாநிலக் கிளையின் இயக்குநர் ஃபைசால் இசாம் தெரிவித்தார்.
மேலும், வருகையாளர்கள் மட்டுமின்றி மருத்துவமனை வளாகத்திலும் பாதுகாப்பு ஆபத்துகளை இது ஏற்படுத்துவதாக அவர் சொன்னார்.
அதுமட்டுமில்லாமல், 2019 முதல் 2024 வரை துவாங்கு ஜாஃபார் மருத்துவமனை, IMU மருத்துவக் கழகம் மற்றும் மருத்துவ உதவியாளர் கல்லூரி தங்குமிடம் உள்ளிட்ட இடங்களில் காட்டுக் குரங்குகளின் அட்டகாசம் இருந்ததாகக் கூறி இதுவரை 9 புகார்கள் பெறப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.


