ஷா ஆலம், மே 30 - இம்மாதம் 22ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில்
தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாகக்
குப்பைகளைக் கொட்டிய குற்றத்திற்காகப் பெட்டாலிங் ஜெயா மாநகர்
மன்றம் 172 குற்றப்பதிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்நோக்கத்திற்காக பிஜே வாட்ச் அமலாக்க நடவடிக்கையின் கீழ் அடிக்கடி
சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்படும் 48 இடங்களில் 14
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகப் பெட்டாலிங் ஜெயா
டத்தோ பண்டார் முகமது ஜாஹிர் சாமிங்கோன் கூறினார்.
கடந்த மே மாதம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையின் கீழ்
எஸ்எஸ்2, செக்சன் 17, எஸ்எஸ்3, பிஜேயு5, பிஜேஎஸ்1 மற்றும் எஸ்எஸ்7
ஆகிய இடங்களில் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று
அவர் சொன்னார்.
இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 13 குற்றப்பதிவுகள் வெளியிட்டன.
அவற்றில் 6 தனிபர்களுக்கு வழங்கப்பட்ட வேளையில் நிறுவனங்களுக்கு
மூன்று குற்றப்பதிவுகளும் வாகனத்திற்கு ஒரு குற்றப்பதிவும்
வழங்கப்பட்டன என்றார் அவர்.
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் 2025/5 கூட்டத்தை முன்னிட்டு
வழங்கிய செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பெட்டாலிங் ஜெயா மக்களின் பாதுகாப்பு மற்றும் சுபிட்சத்தை உறுதி
செய்வதற்கு ஏதுவாக தங்கள் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றும்
அதேவேளையில் முழு ஒத்துழைப்பையும் வழங்கும்படி அனைத்து
தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டார்.


