ஈப்போ, மே 30 - பேராக் வனவிலங்கு மற்றும் பூங்கா துறை, சுங்கை சிப்புட், கம்போங் பெர்லோப் 1இல் வைத்த கூண்டில் 90 கிலோ எடையுள்ள ஆண் புலி ஒன்று சிக்கியது.
அதிகாலை மூன்று மணியளவில் கிராமக் குடியிருப்பு பகுதியிலிருந்து 700 மீட்டர் தொலைவில் வைக்கப்பட்டிருந்த அந்த கூண்டில் 2 வயதுடைய அந்த புலி சிக்கியது.
வேட்டைக்கு வைக்கப்பட்ட கூண்டில் அந்த புலி சிக்கியதை கிராமவாசி ஒருவர் தெரிவித்தாகப் பேராக் பெர்ஹிலித்தான் இயக்குநர் யூசோப் ஷாரிப் கூறினார்.
இதன் மூலம் கிராமவாசிகள் வழக்கமாக தங்களது பணிகள் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து கம்போங் பெர்லோப் 1 மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலி சுற்றித் திரிந்து, குடியிருப்பாளர்களின் கால்நடைகளைத் தாக்குவது கண்டறியப்பட்டது.
நாட்டில் இந்த விலங்குகளின் எண்ணிக்கை அழிந்து வருவதைத் தடுக்க இனப்பெருக்கம் செய்வதற்காக சுங்காயில் உள்ள தேசிய வனவிலங்கு மீட்பு மையத்திற்கு அந்த புலி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


