புத்ராஜெயா, மே 30 - வார்டு தாதியர்களுக்கு வாரத்திற்கு 45 மணி நேர வேலை முறையை செயல்படுத்த, சுகாதார அமைச்சுக்குப் பொது சேவைத் துறை 2 மாதக் கால நீட்டிப்பு வழங்கியுள்ளது.
ஜூன் 1ஆம் தேதி முடிவடைய வேண்டிய இடைக்கால நீட்டிப்பு இப்போது ஆகஸ்ட் 1 வரை நீட்டிக்கப்படுகிறது. இதுவே இறுதி நீட்டிப்பு ஆகும்.
எனவே, புதிய வேலை நேரம் குறித்த சுற்றறிக்கையை மருத்துவமனைகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என பொது சேவைத் துறை வலியுறுத்தியது.
இருப்பினும், புதிய ஷிப்ட் நேரங்களுக்கான திட்டங்களை ஏற்கனவே வகுத்துள்ள மருத்துவமனைகள் இந்த கால நீட்டிப்பால், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்ற அர்த்தமில்லை.
அவர்கள் அதற்குத் தயாராகி இருந்தால், அதனை தாராளமாக செயல்படுத்தலாம் என பொது சேவைத் துறை தெளிவுப்படுத்தியது.
45 மணி நேர வேலை முறையை செயல்படுத்துவதற்கு மருத்துவமனைகள் தயாராக, கடந்தாண்டு டிசம்பர் 1 முதல் 3 மாத கால அவகாசத்தை பொது சேவைத் துறை தொடக்கத்தில் அங்கீகரித்தது.
எனினும், சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டதற்கு இணங்க மார்ச் 1 முதல் மே 31 வரையும், பின்னர் ஜூன் 1 வரை அது நீட்டிக்கப்பட்டது.
வார்டு தாதியர்கள் ஏற்கனவே வாரத்திற்கு 42 மணிநேர வேலை அழுத்தத்தில் பணிபுரிவதால், இந்தக் கூடுதல் நேரங்களுக்கு மலாயன் தாதியர்கள் சங்கம் கடுமையான எதிர்ப்புக் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


