கோலாலம்பூர், மே 30 - நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்திற்குச் சொந்தமானது என நம்பப்படும் 3 கோடியே 20 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு சொத்துக்களை' டான் ஸ்ரீ' அந்தஸ்து கொண்ட நபரிடமிருந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) பறிமுதல் செய்தது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை கட்டுமான சுகுக் நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
தலைநகரில் உள்ள அந்த நபருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளை எம்.ஏ.சி.சி. புலனாய்வுப் பிரிவு சோதனை செய்தது. இச்சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ஆடம்பரக் கைப்பைகள், நகைகள், சொகுசு வாகனங்கள், கடிகாரங்கள் மற்றும் பணம் ஆகியவையும் அடங்கும் என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.
இந்த சோதனையில் சுமார் 50 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு ரகங்களிலான 217 சொகுசு கடிகாரங்கள், 10 லட்சம் வெள்ளிக்கும் அதிக மதிப்புள்ள 27 கைப்பைகள் மற்றும் 40 லட்சம் மதிப்புள்ள நகைகளை எம் ஏ.சி.சி. பறிமுதல் செய்ததாக அந்த வட்டாரம் குறிப்பிட்டது.
இச்சோதனையின் போது கிட்டத்தட்ட 70 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பென்ட்லி, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட ஒன்பது சொகுசு வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக அது கூறியது.
இந்த சோதனையின் தொடர்ச்சியாக மற்றொரு வீட்டில் பல்வேறு வகையான விலையுயர்ந்த மதுபானங்கள் கொண்ட ஒரு கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு சுமார் 30 லட்சம் வெள்ளி என மதிப்பிடப்பட்டுவதோடு இது பணமோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது என அந்த வட்டாரம் மேலும் கூறியது.
அதே நடவடிக்கையில், தலைநகரில் சுமார் 1 2 கோடி மதிப்புள்ள மற்றொரு சொகுசு குடியிருப்பையும் எம்.ஏ.சி.சி. கைப்பற்றியது. இது அந்த நபருக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது.


