பெட்டாலிங் ஜெயா, மே 30 - சிலாங்கூரில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.3 விழுக்காடு குறைந்துள்ளது. இதை மாநிலப் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக் குழு தலைவர் ஜாமாலியா ஜமாலுடின் உறுதிப்படுத்தினார்.
கடந்த மே 18-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சிலாங்கூரில் 519 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இரு மரணச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதற்கு முந்தை வாரம் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 566 ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பாக பெட்டாலிங் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது அங்கு மட்டும் 178 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதற்கு அடுத்த நிலையில் 119 டிங்கி காய்ச்சல் சம்பவங்களோடு கிள்ளான் மாவட்டம் உள்ளது.
டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் குறைந்தாலும் பொது மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு ஜமாலியா கேட்டுக் கொண்டார்.
- பெர்னாமா


