கோலாலம்பூர், மே 30 - ஊழலை ஒழிக்கும் வழிமுறைகளை அறிந்து
கொள்வதற்கும் அதன் தொடர்பான ஆற்றலைப் பெருக்கிக் கொள்வதற்கும்
ஏதுவாக ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) தனது அதிகாரிகளை
டென்மார்க்கிற்கு அனுப்பவுள்ளது.
மலேசியாவுக்கான டென்மார்க் தூதர் வெங்கில்ட் பெர்னருடன் இங்குள்ள
எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் நேற்று சந்திப்பு நடத்தியப் பின்னர்
வெளியிட்ட பேஸ்புக் பதிவில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை
ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இதனைக் கூறினார்.
இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் டென்னிஷ்
நாடாளுமன்ற குறைதீர்ப்பு அனைத்துலகப் பிரிவு மலேசியாவுக்கு வருகை
புரிந்துள்ளது குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஊழல் தடுப்பு நடவடிக்கைளை மேலும் ஆக்ககரமான முறையில்
மேற்கொள்வதற்குரிய வாய்ப்பினை இந்த ஒத்துழைப்பு எம்.ஏ.சி.சி.க்கு
ஏற்படுத்தியுள்ளது என்று அவர் அப்பதவில் குறிப்பிட்டார்.
நாட்டில் ஊழலைத் துடைத்தொழிப்பதில் எம்.ஏ.சி.சி.யுடன் ஒத்துழைப்பை
வலுப்படுத்த மலேசியாவுக்கான டென்மார்க் தூதரகம் தயாராக
உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


