ஜோகூர் பாரு, மே 30 - பத்து பஹாட் நகரில் இணைய வேலை வாய்ப்பு
மோசடிக் கும்பலின் கூடாரமாகச் செயல்பட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும்
பங்களா ஒன்றை முற்றுகையிட்ட போலீசார் ஒரு உள்நாட்டவர் உள்பட 15
பேரைக் கைது செய்தனர்.
நேற்று அதிகாலை 5.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த
சோதனையில் மோசடி நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும்
சுமார் 30,000 வெள்ளி மதிப்புள்ள 14 மடிக்கணினிகள், 19 கைப்பேசிகள்
உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில
போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் கூறினார்.
இந்த சோதனையில் 14 அந்நிய நாட்டினர் மற்றும் ஒரு உள்நாட்டவர்
கைது செய்யப்பட்ட வேளையில் அவர்கள் அனைவரும் தண்டனைச்
சட்டத்தின் 420வது பிரிவு மற்றும் 120பி(2)வது பிரிவின் கீழ்
விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் இந்த மோசடி நடவடிக்கையை மேற்கொண்டு
வந்த இக்கும்பல் இந்த பங்களாவை அழைப்பு மையமாகப் பயன்படுத்தி
வந்துள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
ரஷ்யா நாட்டினரை இலக்காகக் கொண்ட இக்கும்பல் இல்லாத வேலை
வாய்ப்பு தொடர்பான விபரங்களைப் பகிர்வதற்கும் தொடர்பு கொள்வதற்கும்
செயற்கை நுண்ணறிவை (ஏ.ஐ.) பயன்படுத்தி வந்துள்ளது என்றார் அவர்.
இந்த கைது தொடர்பான விசாரணை அறிக்கை சட்டத்துறைத் துணைத்
தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் வழக்கை
மேலும் வலுப்படுத்துவதற்கு கூடுதல ஆதாரங்களை அத்துறை
கோரியுள்ளது என்றும் அவர் சொன்னார்.
சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஜோகூர் மாநிலத்தை தளமாகப்
பயன்படுத்தும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் குமார் எச்சரித்தார்.


