கோலாலம்பூர், மே 29 - ஏழு மாத ஆண் குழந்தை ஒன்று கடந்த திங்கட்கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து இங்கு தாமான் டானாவ் கோத்தாவிலுள்ள ஒரு மழலையர் பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை முடியும் வரை அந்த மழலையர் பள்ளியின் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை தவைமை இயக்குநர் டத்தோ சே மூராட் சாயாங் ராம்ஜானைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.
ஏழு மாத ஆண் குழந்தை நேற்று மயக்கமடைந்த நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய தாமான் டானாவ் கோத்தாவில் உள்ள மழலையர் பள்ளியில் ஜே.கே.எம் நடத்திய சோதனையில், அது பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று வங்சா மாஜு மாவட்ட துணை போலீஸ் தலைவர் சயாருல் அனுவார் அப்துல் வஹாப் தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவ மழலையர் பள்ளியின் உரிமையாளர், செவிலியர், குழந்தையின் பெற்றோர் மற்றும் ஜே.கே.எம் உட்பட அடையாளம் காணப்பட்ட பல சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஏழு மாத ஆண் குழந்தையின் மரணத்திற்கு பால் குடிக்கும்போது ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் இந்த வழக்கு 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1) வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


