ஷா ஆலம், மே 29 - பிளீட் கார்ட் எனப்படும் மானிய விலையி கிடைக்கும்
டீசலை மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் ஐந்து உள்நாட்டினரை
உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர்
மாநிலப் பிரிவு கைது செய்துள்ளது.
இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில் டீசல் சேமிப்பு கிடங்காகப்
பயன்படுத்தப்பட்ட இலக்கமில்லாத வளாகம் ஒன்றில் அமைச்சின்
அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட இந்த சோதனையில் 30 முதல் 45
வயது வரையிலான அந்த ஐவரும் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர்
மாநில கே.பி.டி.என். இயக்குநர் முகமது ஜூஹைரி மாட் ராடே கூறினார்.
ஒரு மாத கால வேவு நடவடிக்கைக்குப் பின்னர் சிலாங்கூர் மாநில
போலீஸ் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் 25 பேர் கொண்ட குழுவினர்
நேற்றிரவு 7.00 மணியளவில் இந்த சோதனை நடவடிக்கையை
மேற்கொண்டதாக அவர் சொன்னார்.
இந்த சோதனை நடவடிக்கையில் ஒரு 30 டன் லோரி, நான்கு கேன்வஸ்
லோரிகள், கொள்கலன் வைக்கப்பட்டிருந்த இரு லோரிகள், ஒரு வேன்
உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 14 ஐ.பி.சி. கொள்கலன்களில்
டீசல் என நம்பப்படும் 7,000 லிட்டர் எரிபொருள் மறைத்து
வைக்கப்பட்டிருந்த து கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் அறிக்கை
ஒன்றில் கூறினார்.
அந்த கிடங்கு கட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளான டீசலை சேமித்து
வைப்பதற்கான உரிய அனுமதியை கொண்டிருக்கவில்லை என்பது
விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக
நபர்களான லோரி ஓட்டுநர்களுக்கும் டீசலை சேமித்து வைப்பதற்கான
அனுமதி இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
பிளீட் கார்டைப் பயன்படுத்தி மானிய விலையில் டீசலை வாங்கும்
இக்கும்பல் பின்னர் அந்த டீசலை இந்த கிடங்கிற்கு கொண்டு வந்து ஐ.பி.சி.
கொள்கலன்களில் நிரப்பி கூடுதல் விலைக்கு கள்ளச் சந்தையில் விற்று
வந்துள்ளது என்றார் அவர்.


