இஸ்தான்புல், மே 29 - காஸா பகுதியில் நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கான
பொது செயல்திட்டம் தொடர்பில மத்திய கிழக்கிற்கான அமெரிக்கத் தூதர்
ஸ்டீவ் விட்காஃப்புடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகப் பாலஸ்தீன
ஹமாஸ் குழு கூறியது.
நிரந்தரப் போர் நிறுத்தம், காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள்
நிரந்தரமாக வெளியேறுவது, மனிதாபிமான உதவிகள் தங்கு தடையின்றி
கிடைப்பதை உறுதி செய்வது தொடர்பான பொதுவான செயல்திட்டம் மீது
ஸ்டீவ் விட்காஃப்புடன் நாங்கள் உடன்பாட்டை எட்டியுள்ளோம் என்று அந்த
அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
அமைதி பிரகடனப்படுத்தவுடன் காஸா விவகாரங்களைக் கவனிக்க
நிபுணத்துவக் குழு ஒன்றை உருவாக்குவதும் அந்த ஒப்பந்தத்தின்
ஷரத்துகளில் ஒன்றாகும்.
மத்தியஸ்தர்களின் உத்தரவாதத்தின் அடிப்படையில் பாலஸ்தீன
கைதிகளின் விடுதலைக்கு பதிலாக உயிருடன் இருக்கும் பத்து
இஸ்ரேலியர்கள் மற்றும் இறந்த சிலரது உடல்கள் ஒப்படைக்கப்படும்
என்று ஹமாஸ் கூறியது.
நீண்ட கால தீர்வுக்கான சில சாதகமான அம்சங்களை நான் உணர்கிறேன்.
நெருக்கடி மீது தற்காலிக போர் நிறுத்தம், நிரந்தரத் தீர்வு மற்றும் அமைத்
தீர்வு ஆகியவையே அவையாகும் என்று வாஷிங்டனில் நடைபெற்ற
செய்தியாளர் சந்திப்பில் ஸ்டீவ் குறிப்பிட்டார்.
இந்த பரிந்துரை சமர்பிக்கப்பட்டவுன் அதன் உள்ளடக்கத்தை அதிபர் டேனால்ட் டிரம்ப் ஆராய்வார் என்றும் அவர் சொன்னார். ஹமாஸ் அமைப்பின் இந்த அறிவிப்பு குறித்து எகிப்து அல்லது கட்டாரைச் சேர்ந்த மத்தியஸ்தர்கள் கருத்து தெரிவிக்கவில்லை.


