புத்ராஜெயா, மே 29 - அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து இன்னும் பரிசீலிக்கப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கொள்கையளவில் பார்த்தால், அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ள பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லியும் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமதுவும் தற்போது விடுப்பில் உள்ளனர். ஆகவே, அவர்களை மாற்ற முடியாது என்று அவர் கூறினார்.
அவர்கள் இருவரும் இன்னும் விடுப்பில் உள்ளனர். விடுப்பில் உள்ள அமைச்சர்களை நாங்கள் மாற்ற முடியாது என்று பிரதமர் துறை ஊழியர்களுடனான மாதாந்திர சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற 2025 கெஅடிலான் கட்சியின் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ரபிஸியும் நிக் நஸ்மியும் முறையே ஜூன் 17 மற்றும் ஜூலை 4 முதல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
தேர்தலில் கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் மற்றும் உதவித் தலைவர் பதவிகளை ரபிஸி மற்றும் நிக் நஸ்மி ஆகியோர் தக்க வைத்துக் கொள்ளத் தவறிவிட்டனர்.
விடுப்பு கோரியும் அமைச்சரவைப் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வது குறித்தும் அவ்விரு அமைச்சர்களிடமிருந்தும் அன்வார் கடிதங்களைப் பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் நேற்று ஓர் அறிக்கையில் அறிவித்தது.
அவர்களின் விடுப்பு கோரிக்கைகளை அவர் அங்கீகரித்துள்ள நிலையில் ஏதேனும் முடிவுகள் இருந்தால் அது குறித்து பிரதமரால் தெரிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.


