கோலாலம்பூர், மே 29 - ரவாங், ஜாலான் மெக்ஸ்வெல்லில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண்ணின் நகையைப் பறிக்க முயன்ற ஆடவன் ஒருவன் கையும் களவுமாகப் பிடிபட்டான்.
மாலை 5.25 மணியளவில் சந்தேக நபரும் இன்னும் தலைமறைவாக உள்ள அவனது சகாவும் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியின் நகையைப் பறிக்க முயன்றதாக கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நூர் அரிபின் முகமது நாசீர் கூறினார்.
அப்பெண் பொருள்களை வாங்கிக்ஹகொண்டு வாகனத்தில் ஏறும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்க நகையைப் பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார். ஆனால் சம்பவ இடத்தில் இருந்தவர்களின் உதவியுடன் அந்தப் பெண்ணின் கணவர் அவரை மடக்கிப் பிடித்தார்.
எனினும், மோட்டார் சைக்கிளில் காத்திருந்த கொள்ளையனின் சகா அங்கிருந்து தப்பினான். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் நெஞ்சு மற்றும் முழங்காலில் காயம் ஏற்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பிடிபட்ட 31 வயதான சந்தேக நபர் விசாரணைக்காக ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அரிபின் மேலும் கூறினார்.
கொள்ளையின் போது வேண்டுமென்றே காயப்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 394 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. மற்ற சந்தேக நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமது ஹக்கிமிர் ரசாலியை 011-33352585 என்ற எண்ணில் அல்லது கோம்பாக் மாவட்ட காவல் தலைமையக செயல்பாட்டு அறையை 03-61262222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


