பாரிஸ், மே 29 - மொத்தம் 299 நோயாளிகளை, குறிப்பாகச் சிறார்களை சித்திரவதை செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட முன்னாள் பிரெஞ்சு அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ஜெர்மன் செய்தி நிறுவனமான டிபிஏ தெரிவித்தது.
பிரான்சின் மிகப்பெரிய சிறார் துன்புறுத்தல் என வர்ணிக்கப்டும் இந்த விசாரணையின் போது, கடந்த 1989 மற்றும் 2014ஆம் ஆண்டுக்கு இடையில் சராசரியாக 11 வயதுடைய 158 ஆண் நோயாளிகளையும் 141 பெண் நோயாளிகளையும் சித்திரவதை செய்ததை ஓய்வுபெற்ற மருத்துவரான 74 வயது ஜோயல் லீ ஸ்கௌர்னெக்
ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்டவர்களை எவ்வித இரக்க உணர்வும் இன்றி உயிரற்ற ஜடம் போல நடத்தியதோடு இச்செயலுக்கு தனது மருத்துவர் பதவியை அவர் பயன்படுத்திக் கொண்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.
மயக்க மருந்தின் தாக்கத்தில் இருந்த நோயாளிகளையும் தாங்கள் துன்புறுத்தப்படுகிறோம் என்பதை உணர முடியாத சிறார்களையும் அவர் அடிக்கடி சித்திரவதை செய்துள்ளார்.
இந்த வழக்கு பிரான்ஸ் நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், சிறார் ஆபாசக் குற்றங்களுக்காக அவருக்கு 2005 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்ட போதிலும் அவரது நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகளால் ஏன்
முன்கூட்டியே தடுக்க முடியவில்லை என்ற கேள்விகளை எழுப்பியது.


