கோலாலம்பூர், மே 29 - அழைப்பு மைய இணைய சூதாட்ட நடவடிக்கையில்
ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஒரு சீன பிரஜை உள்பட 30 பேரை
போலீசார் கைது செய்துள்ளனர். தலைநகர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள
வர்த்தக மையம் ஒன்றில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில்
அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
காலை மணி 11.30 தொடங்கி மேற்கொள்ளப்பட்ட இந்த ‘ஓப் டாடு‘
சோதனை நடவடிக்கையில் வங்சா மாஜூ மாவட்ட போதைப் பொருள்
மற்றும் ஒழுங்கீன செயல் தடுப்பு பிரிவு, (டி7) மற்றும் கோலாலம்பூர்
போலீஸ் தலைமையகத்தின் டி7 பிரிவு உறுப்பினர்கள் பங்கு கொண்டதாக
கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமது இசா கூறினார்.
இந்த சோதனையின் போது அந்த அழைப்பு மையத்தில் ஊழியர்களாக
பணி புரிந்து வந்த 20 முதல் 27 வயது வரையிலான 23 ஆண்கள் மற்றும்
ஆறு பெண்களோடு ஒரு சீனப் பிரஜையும் கைது செய்யப்பட்டதாக அவர்
சொன்னார்.
இச்சோதனையின் போது 30 கணினித் திரைகள், மௌஸ்கள், தட்டச்சுப்
பொறி, 60 கைபேசிகள், நுழைவு அனுமதி அட்டை மற்றும் அகண்ட அலை
வரிசை சாதனம் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று
அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டர்.
சீன பிரஜைகளை இலக்காகக் கொண்டு இணைய சூதாட்ட
நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டு இம்மையம்
செயல்பட்டு வந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தலைமறைவாக இருந்து வரும் சீன பிரஜையினால் இந்த மையம் கடந்த
இரண்டு மாதங்களாக நடத்தப்பட்டு வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த கைது நடவடிக்கை தொடர்பில் 1953ஆம் ஆண்டு சூதாட்ட மையச்
சட்டத்தின் 4(1)(ஜி) பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை
திறக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.


