ஷா ஆலம், மே 29 - இங்குள்ள செக்சன் 27, ஆலம் மேகாவில் செயல்பட்டு
வரும் பொருள் சேமிப்பு கிடங்குகளில் மலேசிய குடிநுழைவுத் துறை
நேற்று மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையில் மியன்மாரைச்
சேர்ந்த காதல் ஜோடி உள்பட 83 சட்டவிரோத அந்நிய நாட்டினர் கைது
செய்யப்பட்டனர்.
இரு சரக்கு சேமிப்பு கிடங்குகளை இலக்காகக் கொண்டு காலை 10.00
மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஓப்
சாசார் சோதனையில் மொத்தம் 150 அந்நிய நாட்டினர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சிலாங்கூர் மாநில குடிநுழைவுத் துறையின் இயக்குநர் கைருள் அமினுஸ் கமாருடின் கூறினார்.
இருபத்திரண்டு முதல் ஐம்பது வயது வரையிலான அந்த அந்நிய
நாட்டினர் அனைவரும் முறையான அடையாள ஆவணங்கள் இல்லாதது,
வருகையாளர் பாஸ் நிபந்தனையை மீறியது, அனுமதிக்கப்பட்டதை விட
அதிக காலம் தங்கியிருந்தது மற்றும் அங்கீகரிக்கப்படாத அடையாள
அட்டைகளை வைத்திருந்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக தடுத்து
வைக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த சோதனையில் பிடிப்பட்டவர்களில் ஐந்து பெண்கள் உள்ளிட்ட 68
மியன்மார் பிரஜைகள், பத்து வங்காளதேசிகள் மற்றும் ஐந்து
பாகிஸ்தானியர்களும் அடங்குவர் என நேற்று இங்குள்ள சிலாங்கூர்
மாநில குடிநுழைவுத் துறை தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர்
கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
சில அந்நிய நாட்டினர் ஐ.நா. அதிகளுக்கான அடையாள
ஆவணங்களையும் வைத்திருந்ததும் மேலும் சிலர் வேலை பெர்மிட்டை
தவறாகப் பயன்படுத்தியதும் இச்சோதனையில் கண்டறியப்பட்டது என்றார்
அவர்.
கைது செய்யபட்ட அனைவரும் 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம்,
1966ஆம் ஆண்டு கடப்பிதழ் சட்டம் மற்றும் 2007ஆம் ஆண்டு மனித
வர்த்தகம் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ்
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.


