ஷா ஆலம், மே 28 - இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பதவியை நிக் நஸ்மி நிக் அகமது ராஜினாமா செய்துள்ளார். அவரது பதவி விலகல் ஜூலை 4 முதல் நடைமுறைக்கு வருகிறது.
நாளை தொடங்கி ஜூலை 3 வரை விடுப்பில் செல்லும் செத்தியா வங்சா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவர், தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற கெஅடிலான் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த நிக் நஸ்மி அமைச்சரவையில் தாம் நியமனம் பெற்றதற்கு தனது முந்தைய உதவித் தலைவர் பதவி முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது என்பதை அறிந்திருப்பதாகக் கூறினார்.
சமீபத்திய கட்சித் தேர்தலில் எனது பதவியை தற்காக்கத் தவறியதால் நான் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக தனது பொறுப்புகளை மீண்டும் நிறைவேற்றுவதற்கும் செத்தியாவங்சா தொகுதியில் பணியாற்றுவதில் கவனம் செலுத்துவதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தவுள்ளதாக நிக் நஸ்மி விளக்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினராக எனது பொறுப்புகளை மீண்டும் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை நான் இப்போது பயன்படுத்திக் கொள்ளக் காத்திருகிறேன். அதே போல் செத்தியாவங்சா தொகுதியில் சேவை செய்வதில் கவனம் செலுத்தவிருக்கிறேன் என்று அவர் கூறினார்.


