ஷா ஆலம், மே 28 - மருத்துவ சுற்றுலா மேற்கொள்வோரின் தேர்வுக்குரிய சிறந்த நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர், துருக்கி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளை மிஞ்சி மலேசியா தற்போது முதலிடத்தில் உள்ளது.
துபாயை தளமாகக் கொண்ட உலகளாவிய நிறுவனமான நோமட் கேபிட்டலிஸ்ட் வழங்கிய இந்த அங்கீகாரம், மலேசியாவின் மருத்துவ நிபுணத்துவம் மீது அனைத்துலக சமூகம் கொண்டுள்ள நம்பிக்கையை புலப்படுத்துகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
எங்கள் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் நிபுணத்துவம், உயர்தர சுகாதாரப் பராமரிப்பு, நவீன சிகிச்சை, நட்புறவானச் சேவை மற்றும் மலேசிய சமூகத்தின் உன்னத மதிப்புகள் ஆகியவற்றின் தனித்துவமான கலவை மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக அவர்கள் இங்கு வருகின்றனர் என்று அவர் சொன்னார்.
இந்த சாதனை பொது மற்றும் தனியார் சுகாதார ஊழியர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் உலகளாவிய சுகாதார மையமாக மலேசியாவின் பிம்பத்தை தொடர்ந்து வலுப்படுத்தும் விவேக பங்காளித்துவ கூட்டு முயற்சிகளின் விளைவாகும் என்று அவர் இன்று முகநூல் வழி வெளியிட்டப் பதிவில் தெரிவித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 13 லட்சம் மருத்துவ சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்ததன் மூலம் மலேசியாவின் மருத்துவ சுற்றுலாத் துறை 200 கோடி வெள்ளிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியது என்று மேலும் கூறினார்.
நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒன்றாக சுகாதார சுற்றுலாவை மேம்படுத்த முயன்று வரும் மலேசிய சுகாதார சுற்றுலா மன்றத்தின் கடின உழைப்பையும் அவர் பாராட்டினார்.
நாங்கள் இத்துடன் நிற்க மாட்டோம். ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துவதற்கும் சுகாதார அமைப்பின் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுப்பதற்கும் சமமான, நிலையான மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் ஒரு அமைப்பை உறுதி செய்வதற்கும் சுகாதார அமைச்சு உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.


